தேவரகசியங்கள் (Secrets of God)
தேவலோகத்தில் சித்திரகுப்தன் அடுத்து யாருடைய மரணம் என்று கணக்கிட்டு எமதர்மனிடம் அந்த பட்டியலை கொடுத்தான்... அதைப்பார்த்த எமதர்மன் எமதூதனை அழைத்து ஒரு பெண்ணின் உயிரை இன்று நீ எடுக்கவேண்டும் என்றும், அந்த பெண் யார் என்று அடையாளம் காட்டி எமதூதனை பூலோகத்திற்கு அனுப்பிவைத்தார்..

அந்த பெண்ணின் கணவன் ஒரு வாரத்திற்கு முன்புதான் ஒரு விபத்தில் மரணமடைந்திருந்தான், அவன் இறக்கும்போது நிறை மாத கர்ப்பிணியாக இருந்தவளுக்கு இப்போதுதான் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து ஒரு வாரம் ஆகிறது.

இப்போது இவளின் உயிரையும் எடுத்துவிட்டால்  அந்த குழந்தையின் நிலை " அய்யோ நினைத்து பார்கவே பாவாமாக இருக்கிறது என்று உயிரை எடுக்கவந்த எமதூதன் அந்த பெண்ணின் உயிரை எடுக்காமல் மீண்டும் தேவலோகம் சென்றான்..

எமதூதன் அந்த பெண்ணின் உயிரை எடுக்காமல் வருவதை அறிந்த எமதர்மன் கடும் கோபத்துடன்"  எமதூதனே, என் கட்டளையை ஏற்று நடந்துக்கொள்வதுதான் உன் வேலை, பிறப்பவர்கள் அனைவரும் இறப்பார்கள் என்பது உலகறிந்த விஷயம், அப்படியிருக்கையில் நீ அவளிடம் கருணை காட்ட வேண்டிய அவசியம் என்ன என்று கோபத்தை கொட்டிய எமதர்மன், உடனே எமதூதனின் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் இந்த மூன்றையும் ஊனமாக மாற்றினார்..

மனிதர்களின் வாழ்க்கைப் பற்றியும், அதன் தேவ ரகசியங்களையும் தெரிந்துக்கொள்ளும்வரை நீ இந்த ஊனத்துடன் பூலோகத்தில் இருப்பாய். ஒவ்வொரு ரகசியமும் புரியும்போது நீ பழைய நிலைக்கு திரும்பி, மீண்டும் தேவலோகத்தை அடையமுடியும் என்று எமதூதனுக்கு சாபம் தந்து பூலோகத்திற்கு அனுப்பிவிட்டார்.

பூலோகத்திற்கு வந்த எமதூதர் அங்கிருந்த ஒரு பாழடைந்த கோவிலில் தங்கினான். அன்று இரவு குளிராலும், பசியாலும் முனங்கிக்கொண்டே இருக்க, அந்த வழியாக சென்ற வியாபாரி ஒருவர் அந்த சந்தத்தை கேட்டு கோவிலுக்குள் சென்றார்..
அங்கு பசியுடன் இருக்கும் எமதூதனை பார்த்து " தம்பி யார் நீங்கள், இந்த பாழடைந்த கோவிலில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, எமதூதன் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்..

அவன் முகத்தை பார்த்தே பசியுடன் இருப்பதை உணர்ந்துக்கொண்ட வியாபாரி அவனை தன்னுடன் அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தார்..

இப்போதெல்லாம் வியாபாரத்தில் பெரிதாக லாபம் இல்லாமல் வெறுங்கையுடன் வரும் தன் கணவன் மீது சில மாதங்களாகவே வெறுப்புடன் இருந்தாள் வியாபாரியின் மனைவி..

வீட்டுக்கு வந்த தன் கணவனுடன் இன்னொரு நபர் இருப்பதைப்பார்த்து எரிச்சல் அடைந்தாள். அப்போது எமதூதனை கோபமாக முறைத்துவிட்டு தன் கணவனை மட்டும் வீட்டிற்குள் அழைத்தாள்..

வீட்டிற்குள் சென்ற கணவன் தன் மனைவியிடம் நல்லவிதமாக எடுத்துக்கூறி அவனின் ஊனத்தைப் பற்றியும், மற்றவர்களைப்போல் உடல் நன்றாக இருந்திருந்தால் நான் கண்டுக்கொள்ளாமல் வந்திருப்பேன். இவனின் நிலைமையை நீ நினைத்துப் பார் என்று கூற, அவளும் மனம் இரங்கி, வீட்டிற்கு வெளியே நின்ற எமதூதனை சிரித்த முகத்துடன் அன்புடன் வரவேற்றாள்..

அப்போது எமதூதனின் ஊனமாக இருந்த கால் சரியாக, எமதூதன் அச்சரியத்துடன் மனித வாழ்க்கையில் மறைந்துள்ள முதல் தேவ ரகசியத்தை புரிந்துக்கொண்டான்...

பிறகு அந்த வியாபாரியுடன் பல ஊர்களுக்கு காலத்திற்கு ஏற்ப வியாபாரங்களை செய்துக்கொண்டு பத்து வருடங்கள் அப்படியே உருண்டோடின..

அப்போது ஒருநாள் வியாபாரத்தில் இருக்கும்போது ஒரு பணக்காரரும் அவருடன் ஒரு அழகான பெண் குழந்தையும் வருவதை பார்த்தான். அந் குழந்தையை பார்த்ததும் எமதூதனின் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத அதிர்வலைகள் உண்டானது..

பிறகு அந்த வியாபாரிடம் யார் அந்த குழந்தை என்று விசாரிக்க அந்த குழந்தை தான் இரக்கப்பட்டு உயிரை எடுக்காமல் சென்ற அந்த பெண்ணின் குழந்தை என்றும், ஒரு வார குழந்தையாக இருக்கும்போது அவள் தாய் இறந்ததால் அந்த பணக்காரர் அவளை தத்தெடுத்துக்கொண்டார் என்ற விவரத்தை அறிந்ததும் எமதூதனின் ஊனமாக இருந்த கை சரியானது. அப்போதுதான் வாழ்க்கையின் இரண்டாவது தேவ ரகசியத்தையும் எமதூதன் புரிந்துக்கொண்டான்..

மறுநாள் பக்கத்து ஊரின் மிகப்பெரிய செல்வந்தன் வியாபாரியை தேடி வந்தான். தன் யார் என்று அறிமுகப்படுத்துக் கொண்டவன். "தனக்கு சந்தனக்கட்டைகளால் செய்யப்பட்ட கட்டில் ஒன்று வேண்டும் என்றும், அதை நீங்கள் தான் தயார் செய்து தர வேண்டும் என்று ஒரு மிகப் பெரும் தொகையை வியாபாரியிடம் கொடுத்துவிட்டு சென்றான்.

பத்து நாட்களில் கட்டில் தயாராக இருக்க வேண்டும் என்று செல்வந்தர் கூறினாரே, நாளை பத்தாவதுநாள் செல்வந்தர் வந்து கட்டிலை கேட்டால் என்ன செய்வேன், சந்தன கட்டைகள் மட்டுமே இருக்கிறது, இன்னும் எதையும் செய்யவில்லையே என்று வியாபாரி பதற்றமானார்..

ஆனால், எமதூதன் அமைதியாக அந்த வியாபாரிடம் " ஐயா நீங்கள் கட்டில் செய்ய வேண்டாம், அந்த சந்தைக் கட்டைகளை எரியூட்டுவதற்கு தயாராகை வை வைத்திருங்கள்" என்று கூற, வியாபாரியோ எதுவும் புரியாமல் முழித்தார்..

சிறிது நேரத்தில் அந்த செல்வந்தனின் உதவியாளர் வந்து" ஐயா சந்தன கட்டில் செய்ய வேண்டாம், அந்த சந்தனக்கட்டைகளை கொடுங்கள். பணக்காரர் இன்று காலை இறந்துவிட்டார்" என்று அந்த செல்வந்தனை எரிக்க சந்தைக்கட்டைகளை வாங்கிக் கொண்டு சென்றான்.

அதைப்பார்த்ததும் எமதூதனின் ஊனமாக இருந்த கண்ணும் சரியானது. வாழ்க்கையின் மூன்றாவது தேவ ரகசியத்தையும் தெரிந்துக்கொண்டு தேவலோகத்திற்கு புறப்பட தயாரானான்..

அப்போது வியாபாரியோ" என்னிடம் வரும்போது ஊனமாக இருந்தாய். பிறகு அனைத்தும் ஒவ்வொன்றாக சரியானது. அந்த பணக்காரனின் மரணத்தை சரியாக கணித்தாய் இதெல்லாம் எப்படி சாத்தியமானது, யார் நீ என்று கேட்டார்..
" ஐயா நான் எமனுடைய தூதுவன். ஒரு தாய் இறந்து போனால், அந்தக் குழந்தைக்கு யார் கதஎன்று பரிதாப்பட்டு அந்த தாயின் உயிரை எடுக்காமல் விட்டதனால், பூமிக்கு சென்று தேவ ரகசியத்தை தெரிந்து கொண்டு வா" என்று எமதர்மன் என்னை இங்கே அனுப்பினார். அதனால் தான் பூமிக்கு வந்தேன்.

இப்போது அந்த தேவ ரகசியங்களை தெரிந்துகொண்டேன். நான் திரும்ப தேவலோகத்திற்கு செல்கிறேன்" என்று எமதர்மன் கூற,

"மனிதர்களின் தேவ ரகசியமா அப்படியென்றால் என்ன எனக்கும் கொஞ்சம் கூறுங்கள் என்று வியாபாரி கேட்க,
முதல்நாள் என்னை உன் வீட்டிற்கு அழைத்துச்சென்றபோது உன் மனைவி என்னை கோபமாக பார்த்தால் அல்லவா? அப்போது அவள் முகத்தில் தரித்திர தேவி தெரிந்தது.  பத்தாவது நிமிடம் என்னை சாப்பிட வா என்று கூப்பிடும் போது அந்த முகத்தில் அன்னை மாகலட்சுமி தெரிந்தார்.

அப்போது, இந்த உலகத்தில்"ஒருவன் பணக்காரன் ஆக இருப்பதற்கும் ஏழையாக இருப்பதற்கும் அவனுடைய எண்ணங்கள் தான் காரணம்" என்று தெரிந்துகொண்டேன்.

ஒருவனின் வாழ்க்கையில் தாத்திரம் போய் மகாலட்சுமி வருவதற்கு பத்து நிமிடங்கள் தான் தேவை என்றும் தெரிந்து கொண்டேன். அது எப்போது, எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் தெரிந்துகொண்டேன். இது நான் உணர்ந்த முதல் தேவ ரகசியம்.

"பத்து வருடம் கழித்து ஒரு செல்வந்தன் ஒருவருடன் ஒரு பெண் குழந்தை வந்தாள் அல்லவா? அது தான் நான் இதன் அம்மா இறந்துவிட்டால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்த குழந்தை. நிஜமான தாய் வறுமையில் தவித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவள் இறந்தாலும் அந்த குழந்தையை பாதுகாக்க அன்பான, வசதி படைத்த ஒரு செல்வந்தனை இறைவன் தயாராக வைத்திருந்தான்.

ஒரு எமதூதன் ஆகிய எனக்கே அந்த குழந்தையின் மீது கருணை இருக்கும்போது, இறைவனுக்கு இருக்காதா? அவன் அதற்கு ஒரு மாற்று வழி வைத்துக்கொண்டுதான் அந்த உயிரை எடுப்பான். இது நான் உணர்ந்த இரண்டாவது தேவரகசியம் என்று எமதூதன் கூறினான்.

" மூன்று நாட்களில் சாகப்போகிறவன் இன்னும் 20 வருடங்கள் நான் உயிரோடு இருக்கப் போகிறேன் என்று நினைத்துக்கொண்டு, விலையுயர்ந்த சந்தனக்கட்டில் செய்யும்படி உங்களிடம் ஒரு செல்வந்தன் பணம் தந்தான் அல்லவா,

ஆனால் எனக்குத் தெரியும் அவன் மூன்று நாட்களில் சாகப்போகிறான் என்று.

அதனால் தான் உங்களுக்கு கட்டில் செய்ய உதவி செய்யாமல் காலம் தாழ்த்தினேன்.

உண்மையில் இந்த மக்கள் இந்த உலகத்தில் ஏதோ நூறு வருடங்கள் இருநூறு வருடங்கள் வாழ்ந்துவிடுவதைப்போல் நினைத்துக் கொண்டு மனதை குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.! நேற்று இருந்தவன் இன்று இல்லை. நாளை இருப்பவன் மறுநாள் இல்லாமல்  போகலாம் இதுதான் இந்தக் கலியுகத்தின் எதர்த்தமான உண்மை!

அது தெரியாமல் ஒவ்வொருவரும் நான் மட்டும் அதிக நாட்கள் இருப்பேன் என்றும், மற்றவன்தான் செத்துக் கொண்டிருக்கிறான் என்றும் நினைக்கிறான் அல்லவா? அதுதான் நான் உணர்ந்த மூண்றாவது தேவ ரகசியம்!!

ஒவ்வொருவரும் எதிர்காலத்தை நினைத்து தேவையில்லாமல் பயப்படுவதால்தான் உலகமே நிம்மதி இல்லாமல் இருக்கிறது. உண்மையில் அடுத்த நாள் இருப்பது நம் கையில் இல்லை என்ற மனநிலையுடன் வாழ்ந்தால் மட்டுமே நிம்மதியை நிறைவாக அனுபவிக்க முடியும்...

உங்களுக்கு புரியும்படி அந்த மூன்று தேவரகசியங்களை கூறுகிறேன்..

முதலாவது ஏழையாக இருப்பதும் பணக்காரன் ஆக இருப்பதும் நம்முடைய எண்ணங்கள் தான் முடிவு செய்கின்றன.

இரண்டாவது எது நடந்ததோ அதற்கு கடவுள் ஒரு மாற்றுவழி வைத்திருப்பார். மனிதனின் மனதின் உள்ள அகங்காரத்தாலும், அறியாமையினாலும் அவர்களால் அதைப் புரிந்துக்கொள்ள முடிவதில்லை.

மூன்றாாவது எந்த நேரத்திலும் ஒருவனுக்கு மரணம் வரலாம். இது தெரியாமல் மனிதர்கள் தான் என்ற அகந்தையிடன் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அறியாமைதான் உலகில் உள்ள துக்கங்களுக்கு எல்லாம் முதல் மூலக்காரணம்.

இவைதான் அந்த மூன்று தேவரகசியங்கள் என்று கூறிவிட்டு எமதூதன் அங்கிருந்து மாயமானான்...

எனவே, நாமும் இந்த தேவ ரகசியங்களை புரிந்துக் கொண்டு வாழப் பழகிவிட்டால், நம் உடலில் உயிர் இருக்கும் வரை நிம்மதியாக நிச்சயம் வாழ முடியும்..

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்