புது வருடம் பிறந்த வரலாறு

 உலகம் முழுதும் உள்ள பெரும்பாலான மக்களின் வீடுகளில், புதன், 19 July 2023 திகதியை இன்றைய அவர்களது வீட்டுக் கலண்டர் காட்டிக் கொண்டிருக்கும். போன்களில் திரைகளில் உள்ள திகதியும் நிச்சயமாக இதுவாகத்தான் இருக்கும்.


ஆனால் மாயன் நாட்காட்டியின் கணக்கு 13.0.9.13.8, பிரெஞ் நாட்காட்டியில் 13 Thermidor an 230 de la Révolution, யூதர்களின் Hebrew கலண்டரில் 3 Av 5782, Julian கலண்டரில் 18 July 2023,

ISO கலண்டரில Day 7 of week 30 of 2023, Persiaவில் -9 Mordad 1401, Ethiopia கலண்டரில் 23 Hamle 2015, Coptic கிறிஸ்தவர்களுக்கு 23 Abib 1739, சீனாவில் Cycle 78, year 39 (Ren-Yin), month 7 (Wu-Shen), day 2 (Jia-Shen), ஹிந்துக்களின் பஞ்சாங்கத்தில் (Civil) Raviãra, Sravana 9, Saka Era 1944,

ஆதிகால Zoroastrianகளுக்கு (Fasli)ruz (day): Tir, mah (month): Amardad, 13, அது போல, உலக வாழ் முஸ்லிம்களுக்கு 1 Muharram 1445. புது வருடப் பிறப்பு.


உலகம் முழுவதும் இப்படியான 40ற்கும் மேற்பட்ட கலண்டர்கள் இன்றும் ஏதோ ஒரு வகையில் பாவனையில் உள்ளன. ஒவ்வொரு கலண்டரும் ஒவ்வொரு சம்பவத்தை, நிகழ்வை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. 


இதை அடியொற்றி, முஹம்மது நபி ﷺ அவர்கள், தம் 70 தோழர்களுடன் மக்காவில் இருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த சம்பவத்தை -ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய கலண்டரும், உருவாக்கப்பட்டிருக்கிறது.


நபியவர்கள் பிறந்த போது, இஸ்லாமிய பிரச்சாரம் செய்த போது, ஏன் அவர்கள் இறந்த போது கூட அன்றைய அரபுகள் மத்தியில் எந்தவித கலண்டரும் இருக்கவில்லை. ஆனால், சந்திரனை அடிப்படையாகக் காலக் கணிப்பீட்டு மாதங்கள் பாவனையில் இருந்திருக்கின்றன. வருடங்கள் சம்பவங்களையும்,விஷேட நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு அறியப்படுபவையாக இருந்திருக்கின்றன. முஹம்மது நபிﷺ அவர்கள் பிறந்த வருடம், "யானை வருடம்" என அழைக்கப்பட்டதும் இதே காரணத்தால் தான். சன்ஆவை சேர்ந்த மன்னன் ஆப்ரஹா, புனித கஃபாதுல்லாறை இடிப்பதற்கு யானைப்படையுடன் வந்த ஆண்டு அது என்பதால் அதற்கு அப்படி ஒரு பெயர்.  


இரண்டாம் கலீபா உமர் அவர்களின் ஆட்சியில் நிறைய நாடுகள் கைப்பற்றப்படுகின்றன. ஆளுகைக்குள் வருகின்றன. இன்னும் நிறைய நாடுகளோடு, சாம்ராஜ்யங்களோடு வர்த்தக, ராஜதந்திர உறவுகள் வியாபிக்கப்படுகின்றன. கடிதத்தொடர்புகள், அரச அறிவித்தல்கள் நீண்ட தூரங்களுக்கு பரிமாற்றப்படுகின்றன. இப்போது, அரச அலுவலர்களுக்கு சிக்கல்கள் உருவாக தொடங்குகின்றன. எது முதல் டொக்குமன்ட், எது முதல் கடிதம், எது பதில் கடிதம், எதை எதற்கு பின்னர் அரச கோப்பில் சேர்க்க வேண்டும்?. போன்ற அட்மினிஸ்ரேடிவ் ப்ரெப்ளம்கள் நிறைய வரத் தொடங்குகின்றன.


இவைகளை கலீபாவின் கவனத்துக்கு கொண்டு வந்த போது, இதை தீர்ப்பதற்கு, உமர் (ரழி) அவர்கள், கமிட்டி ஒன்றை, அபூ மூஸா அல் அஷ்அரி தலைமையில் நியமனம் செய்கின்றார். அக்காலத்தில் ரோம், பாரசீகம் போன்ற சாம்ராஜ்ஜியங்களில் பாவனையில் இருந்த பல்வேறு கலண்டர்கள், யூதர்கள் கிறித்தவர்கள் மத்தியில் பாவனையில் இருந்த ஆண்டு கணீப்பீட்டு முறைகள் அனைத்தும் வாதப் பிரதி வாதங்களுக்கு உட்படுகின்றன. அலசி ஆராயப்படுகின்றன. இறுதியில் இஸ்லாமிய வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து தனித்துவமான கலண்டர் உருவாக்க முடிவு செய்யப்படுகின்றது. 


அதாவது நபியவர்கள் மரணித்து, முதல் கலீபா அபூபக்கர் அவர்களும் மரணித்து, இஸ்லாமிய அரசு மதீனாவில் தோன்றி 17 வருடங்களும் கடந்து விட்டதற்கு பின்னர் தான், நாம் இப்போது கொண்டாடும் ஹிஜ்ரா கலண்டர் செயலுருவம் பெற்றிருக்கிறது. அன்றில் இருந்து முஹர்ரத்தை முதல் மாதமாகும் துல்ஹஜ்ஜை கடைசி மாதமாகவும் கொண்ட ஹிஜ்ரா கலண்டர் தோற்றம் பெறுகிறது. இந்த கலண்டர் தான் இஸ்லாமிய உலகம் முழுதும் ஒபிசியல் கலண்டாராக உஸ்மானிய சாம்ராஜ்ஜியம் விழும் வரை -1926 ம் ஆண்டு வரை பாவனையில் இருந்தது வந்திருக்கிறது. இன்றும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் பாவனையில் இருந்து வருகிறது. 


எல்லா கலண்டர்களுக்கும் ஒரு வரலாற்று சம்பவம் இருப்பது போல், இஸ்லாமிய ஹிஜ்ரி கலண்டருக்கும் ஒரு சம்பவம் இருக்கிறது. அது தான் நாடு துறந்து நபி அவர்கள் சென்ற ஹிஜ்ரத் பயணம்.


பின் குறிப்பு - படத்தில் நீல நிற கோட்டினால் காட்டப்பட்டுள்ளது நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரா செல்ல பயன்படுத்திய‌ பாதை. மக்காவில் இருந்து வேறு எங்கே செல்வது போல ஆரம்பித்து, அன்றைய வர்த்தக தளவாடங்களின் போக்கு- வரத்து பாதையை தவிர்த்து, அதற்கு சமாந்தரமாக, வழி தவிறிவிடாதபடி மிக்க கவனமாக திட்டமிடப்பட்டிருக்கிறது‌ அந்த ஹிஜ்ரத் பயணம். 650 Km நீளமான பயணத்தை மாறி, மாறி நடந்தும், ஒட்டகத்திலும் தோழர் அபூபக்கரின் (ரழி) துணையோடு, பாலைவனத்தில் பயணம் செய்வது என்பது மிகப் பெரிய தியாகம். கட்டாயம் நினைவுகூர்ந்து கொண்டாடப்பட வேண்டிய ஒரு சம்பவம்.


எல்லோருக்கும் இஸ்லாமிய புது வருட நல் வாழ்த்துக்கள்.

Popular posts from this blog

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

இரண்டு ஆடுகள்

எலியும், தவளையும்